
2016 ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் மாற்றியது தொடர்பான வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை முடித்துவைத்துள்ளது சிபிஐ நீதிமன்றம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, விதிகளை மீறி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளைப் பெற்றதாக சேகர் ரெட்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.24 கோடி ரூபாய் அளவிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சேகர் ரெட்டி மீது மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்த சம்பவத்தில் சேகர் ரெட்டியை தொடர்ந்து பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சேகர் ரெட்டி மீது பதியப்பட்ட இரண்டு வழக்குகள், அவருக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என முடித்துவைக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது மற்றும் கடைசி வழக்கும் ஆதாரம் இல்லாததால் முடித்துவைக்கப்பட்டுள்ளது.