ஒரே ஏடிஎம் -இல் பணம் எடுத்த மூன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியா கரோனா வைரஸால் 23,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் ஒரே ஏடிஎம் -இல் பணம் எடுத்த மூன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் மூன்று பேர் பணம் எடுத்துள்ளனர். இதனையடுத்து இவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், ராணுவ வீரர்கள் மூவரும் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து இவர்களுடன் தொடர்பிலிருந்து 28 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தில் ஏற்கனவே எட்டு பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் மூவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.