கல்வான் பள்ளத்தாக்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி எனச் சீன வெளியுறவுத்துறை குறிப்பிட்டிருந்த நிலையில், இதுகுறித்து இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலால் இருநாட்டு உறவுகளில் புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், "இந்தியா கல்வான் பள்ளத்தாக்கில் விதிகளை மீறி சாலைகளையும், பாலங்களையும் கட்டியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு இந்தியச் சீன எல்லையின் சீனாவின் எல்லைக்குட்பட்ட மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சீன சமூக அறிவியல் அகாடமியைச் சேர்ந்த எல்லைகள் விவகார நிபுணர் ஸாங் யோங்பான், பழைய வரலாற்றுக் குறிப்புகளை மேற்கோள்காட்டி, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் மேற்குப் பகுதி முழுவதும் சீனாவுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா தற்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் பகுதியும் சீன பகுதியே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் இந்த உரிமை கோரலை இந்தியா மறுத்துள்ளது. சீனா தனது எல்லையை விரிவுபடுத்த முயல்வதாக இந்தியா குற்றம்சாட்டும் நிலையில், ஆதாரமற்ற ஒரு விஷயத்தைப் பெரிதாக்கச் சீனா முயல்வதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கட்டுப்பாட்டு எல்லை விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமான எந்த முடிவையும் இந்திய அரசு அனுமதிக்காது என்று நேற்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.