புதுச்சேரி மாநிலம், பாவனா நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம். இவர் ரெட்டியார்பாளையம் கடைத்தெருவில் பெட்டி கடை வைத்துள்ளார். இவரது மகன் கிஷ்மன் (வயது 10) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று (14/07/2022) காலை மகனை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பன்னீர்செல்வம் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தந்தை, மகன் இருவரும் கீழே விழுந்தபோது மகன் கிஷ்மன் மீது பேருந்து சக்கரம் ஏறியதால், அதே இடத்தில் கிஷ்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ரெட்டியார்பாளையம்- விழுப்புரம் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைக் கண்டித்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் சாலையில் சடலத்தை வைத்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையை விரிவாக்க வேண்டும், வாகனங்களை சாலை ஓரம் விடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால், அப்பகுதி முழுவதுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மறியல் நடைபெறும் இடத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.