Skip to main content

'குடியரசுத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்'!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

president of india ram nath kovind health condition is improve say Rashtrapati Bhavan

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று காலை, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராணுவ மருத்துவமனையிலிருந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன்று (03.04.2021) இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். 

 

அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, பைபாஸ் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்தனர். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்தும் கூறியிருந்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரிடம், குடியரசுத் தலைவரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகக் கூறியுள்ள அவர், குடியரசுத் தலைவரின் ஆரோக்கியத்திற்காகவும், அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகத் தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்