![DMK Women wing condemns the incident of a 6-year-old girl in Puducherry](http://image.nakkheeran.in/cdn/farfuture/GLDYFBvLPsY4pfrF1BzJuPaQWIqW_8rReemNxFbkWf8/1739597971/sites/default/files/inline-images/58_76.jpg)
புதுச்சேரியில் 6 வயது சிறுமிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு அம்மாநில மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீ காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி தவளக்குப்பத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பள்ளியில், ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயது சிறுமி இன்று அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மண்கண்டன் என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரி பெற்றோர் மற்றும் பெண்களை பதற வைத்திருக்கிறது. இன்று காலை நகரின் மையப்பகுதியில் அரங்கேறிய மூன்று கொலை சம்பவத்தால் மாநிலத்தின் பீதி அடங்காத இந்த சூழலில் இப்படி ஒரு சிறுமியின் மீதான பாலியல் துன்புறுத்தல், பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
இன்று மாலை சிறுமி தனது அம்மாவிடம் நடந்தவையை பற்றி கூறிய பின்னரே இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளியில் இத்தனை பேர் இருந்தும் இந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர் மீது எவ்வித சந்தேகமும் வராதது ஏன்? பள்ளிக்கு செல்ல குழந்தை அரண்டு பயந்து நடுங்கியதை பற்றி ஏன் ஒரு ஆசிரியர் கூட கண்டுபிடிக்கவில்லை? குறைந்த சம்பளம் என்ற காரணத்தால் மனிதத்தன்மையே இல்லாதவனை ஆசிரியர்களாக நியமிப்பதால் குழந்தைகள் மீதான வக்ரப்பார்வையில் வந்து முடிந்திருக்கிறது. இதற்கு பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். மாலை 5.00 மணி முதல் பெற்றோர், பொது மக்களின் தொடர் போராட்டம் புதுச்சேரியை உலுக்கி வருகிறது. ஆசிரியர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவனால் வேறு குழந்தைகளும் பாதிக்கப்பட்டார்களா என்று நேர்மையானவர்களை கொண்டு விசாரணை ஆணையத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்க வேண்டும். புதுச்சேரியில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள் நல ஆணையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யாத புதுச்சேரி காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
ஆசிரியர் வேலைக்கே தகுதியில்லாத மணிகண்டனை பெற்றோரே பள்ளியில் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்த போதிலும், பள்ளியின் பின்புறமாக தப்ப வைத்தவர்கள் யார்? குற்றவாளியை தப்பிக்க வைத்தவர்கள் மீதும் போக்சோ சட்டம் பாய வேண்டும் . பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்கிட வேண்டும். மீண்டும் இது போல இன்னொரு குழந்தை பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசின் கல்வித்துறை, காவல்துறை, மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும். கேடுகெட்ட ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கும் வரை திமுகழக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சிவா அவர்களின் தலைமையில் திமுக மகளிரணி களத்தில் நின்று போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.