டெல்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் பயணம் மேற்கொண்ட 19 பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர்களை மீண்டும் டெல்லிக்கே அனுப்பியுள்ளது கர்நாடக அரசு.
டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு 553 பயணிகளுடன் சிறப்பு ரயில் வந்ததைத் தொடர்ந்து, அதில் வந்த பயணிகளுக்கு அதிகாரிகள் கரோனா பரிசோதனைகளைச் செய்தனர். இதில் சோதனைத் தொடங்கி சிறிது நேரத்தில் சுமார் 140 பயணிகள் சோதனைகளுக்கு உட்பட முடியாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அதிகாரிகள் மற்றும் பயணிகள் இடையே இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இறுதியில் 19 பயணிகளைத் தவிர மற்ற அனைவரும் சோதனைகளுக்கும், 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கும் ஒப்புக்கொண்டனர். ஆனால், 19 பயணிகள் மட்டும் சோதனை மற்றும் கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், அவர்கள் அனைவரும் மீண்டும் டெல்லி பயணிகள் ரயிலில் ஏற்றிவிடப்பட்டனர். சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு ஒப்புக்கொண்ட 507 பயணிகள், சோதனைகள் செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் 203 பேர் அரசு ஏற்பாடு செய்திருந்த இலவசத் தனிமை மையங்களுக்குச் செல்ல ஒப்புக் கொண்டனர். மீதிப் பேர் விடுதிகளுக்குச் சென்றனர்.