
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெ.விடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சரிபார்க்கப்பட்ட நிலையில் இன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தமிழகம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
1991-96 ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் அவரிடமிருந்து 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 1500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களும், சொத்துக்களும் 2004 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க நகைகள், ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி மோகன் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தங்க நகைகள், ஆவணங்கள் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்துவரப்பட்டு சரிபார்க்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 37 காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சொத்துக்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் இவை அனைத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இவை முழுமையாக தமிழகம் கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகைகள் அனைத்தும் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகை பெட்டிகள் வைக்கப்பட்ட வாகனங்கள் பாதுகாப்புடன் தமிழகத்தை நோக்கி புறப்பட்டு இருக்கிறது. தமிழக எல்லை வரை நகைகளை எடுத்து வரும் வாகனத்திற்கு கர்நாடகா போலீசார் பாதுகாப்பு வழங்க உள்ளனர். தமிழக எல்லை தொடங்கியதும் தமிழக காவல்துறையினரின் பாதுகாப்புடன் இந்த வாகனம் சென்னைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.
மொத்தமாக மூன்று வாகனங்களில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை இணைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர், ஒரு ஏசிபி, இரண்டு காவல் ஆய்வாளர்கள், இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், 25 காவலர்கள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்புடன் வாகனம் தமிழகத்தை நோக்கிப் புறப்படுகிறது.