![kamal praised sivakarthikeyan at amaran 100th day celebration event](http://image.nakkheeran.in/cdn/farfuture/lHmQGlFYxZJ5HwQQYuY_Duq_lg4b6RkhCVKYu4t3JuE/1739627087/sites/default/files/inline-images/123_70.jpg)
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர்த்து படத்தின் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு கமல் கேடயம் வழங்கி கௌரவித்தார். பின்பு படக்குழுவினர் ஒவ்வொருத்தராக மேடைக்கு வந்து படம் தொடர்பாக தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் கமல் மேடையில் பேசுகையில், “ஒரு படம் 15 இடத்தில் ஃபோக்கஸ் சரியாக இல்லை என்றால் தோல்வி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எவ்வளவு பெரிய ஹீரோ நடித்தாலும் எவ்வளவு பெரிய இசையை வாசித்தாலும் எவ்வளவு பெரிய நல்ல டைர்க்டர் இயக்கினாலும் ஃபோக்கஸ் ஃபில்லர் சரியாக பொருத்தவில்லை என்றால் அந்த படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால் ஒவ்வொரு டெக்னிஷியனும் எனக்கு முக்கியம். அவர்களோடு தோலோடு தோல் நின்று சின்ன டெக்னிஷியனாக இருந்து இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். அதனால் அவர்களை மதிப்பது என் கடமை” என்றார்.
பின்பு சிவகார்த்திகேயன் குறித்து பேசுகையில், “என்னைக்கு அவர் தனது முதலீட்டை வீடு கட்டுனது போக அடுத்து சினிமாவில் போட்டாரோ, அப்போ தெரிந்தது நம்ம அலைவரிசைப்பா இந்த ஆளு” என பாராட்டினார்.