இந்தியா மட்டுமின்றி உலகையே ஆட்டிப்படைத்துவரும் காரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா ஏற்படமால் தடுப்பதற்கான தடுப்பூசி மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. கரோனா சிகிச்சையில் வேறு வேறு நோய்களுக்கான மருந்துகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்தநிலையில் சிப்லா, ரோச் இந்தியா ஆகிய மருந்து நிறுவனங்கள், கரோனா சிகிச்சைக்கான மருந்து ஒன்றைத் தயாரித்துள்ளன. இது ஆன்டிபாடி காக்டெய்ல் என பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக்கு இந்தியாவில் சமீபத்தில் அவசரகால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த மருந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்தின் ஒரு பாக்கெட்டில் 600 கிராம் காசிரிவிமாப் மருந்தும் 600 கிராம் இம்தேவிமாப் மருந்தும் இருக்குமென்றும், இதில் ஒரு மருந்தின் விலை ரூபாய் 59,750 என்றும், இரண்டு மருந்துகள் சேர்ந்த ஒரு பாக்கெட் 1,19,500 ரூபாய்க்கு விற்கப்படும் என ரோச் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த மருந்தின் ஒரு பாக்கெட்டை இருவரின் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள ரோச் இந்தியா நிறுவனம், இந்த மருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுதிக்கப்படுவதையும், உயிரழப்புகள் ஏற்படுவதையும் 70 சதவீதம்வரை குறைக்கிறது எனவும் ரோச் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.