அண்மையில் கேரளாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து கேரள அரசின் போக்குவரத்து நெறிமுறைகளையே மாற்றவைத்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கடந்த 6ஆம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர். பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள், 2 ஊழியர்கள் என மொத்தம் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்து நள்ளிரவு பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொட்டாரக்கரையில் இருந்து கோவை நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்தின் மீது மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து மோதியது. இதில் நிலை தடுமாறி சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 மாணவ மாணவிகள் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பே சம்பந்த ஓட்டுநர், பேருந்தில் ஒலிபரப்பான பாடலுக்கு ஓட்டுநர் இருக்கையில் இருந்து எழுந்து ஆடிக் கொண்டே பேருந்தை இயக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இப்படிப்பட்ட அலட்சியங்கள் காரணமாக நிகழ்ந்த இந்த விபத்து கேரளாவின் போக்குவரத்து நெறிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வைத்துள்ளது.
இதனால் கேரள அரசு தனியார் சுற்றுலா பேருந்துகளுக்கு பல்வேறு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தனியார் சுற்றுலா பேருந்துகள் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், சவுண்ட் சிஸ்டம், லேசர் விளக்குகள் பேருந்தில் இருக்கக்கூடாது என நெறிமுறைகளை வகுத்துள்ளது. கேரளா முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா பேருந்துகள் இருக்கும் நிலையில், அவை அனைத்தும் வெள்ளை நிறத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் சஜீவ் என்பவர் தன்னுடைய பேருந்திற்கு தனது கையாலேயே வெள்ளை நிறம் அடித்து வருகிறார். மேலும் இதுகுறித்து கூறுகையில், 'கரோனா பாதிப்புக்கு பிறகு இப்பொழுதுதான் வாழ்க்கை சீராகியுள்ளது. அதற்கிடையே அரசின் இந்த நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. யாரோ செய்த தவறுக்கு நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என தெரிவித்துள்ளார்.