Skip to main content

கேரளாவில் புதிய வகை கரோனா பரவலா? - மத்திய அரசு விளக்கம்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

kerala

 

இந்தியாவிலேயே தற்போது அதிக கரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக கேரளா இருந்துவருகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுவருகின்றன. கேரள அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றையும் அனுப்பியது.

 

இந்தநிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகும் 40 ஆயிரம் பேருக்குக் கேரளாவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு சக்தியை ஊடுருவும் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் எனவும் மத்திய குழு வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவ்வாறு புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் உருவாகியுள்ளதா என கண்டறிய இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேருக்கும் மரபணு வரிசைமுறை சோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.

 

இந்தநிலையில், இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. கேரளாவில் புதிய மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளியான செய்திகள் அடிப்படையற்றவை என்றும், முற்றிலும் தவறானவை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்