Skip to main content

மத்தியப் பிரதேசத்தில் தி.மு.க.வை பற்றி பேசிய அமைச்சர் அமித்ஷா

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Amitshah says DMK is drowning in succession politics

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது,  2003 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான மாநில பா.ஜ.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமித்ஷா, “வாரிசு அரசியல் என்பது விஷம் போன்றது. வாரிசுகள் அரசியலில் இருந்தால் ஆட்சியும், கட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அரசியல் சார்ந்த முக்கிய பொறுப்புகளும், பதவிகளும் ஒரு குடும்பத்தில் மட்டும் தான் இருக்கும். கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் முதல் மற்றவர்கள் வரை ஒரு குடும்பத்துக்கு மட்டும் தான் அடிபணிந்து சேவகம் செய்து வாழ வேண்டும். 

 

அதிகாரத்தில் உள்ள அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் தான் மற்றவர்கள் பதவிகளை பெற முடியும். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் பின்தள்ளப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். திறமை உள்ளவர்கள் ஆட்சியில் இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்த முடியாது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ், தி.மு.க, உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகள் வாரிசு அரசியல் தான் செய்து வருகின்றன. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இயங்குகின்றன. அப்படியானால், கீழ்மட்டத்தில் இருந்து வருபவர்களின் நிலைமை என்ன” என்று தெரிவித்தார். 

 

அப்போது பா.ஜ.க.விலும் வாரிசு அரசியல் இருக்கிறதே என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,  “பா.ஜ.க.வில் உள்ள வெகு சிலருக்கு மட்டும் அவர்களின் திறமைகளின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதை வைத்துக் கொண்டு, வாரிசு அரசியலில் நடக்கும் தீமையின் வீரியத்தை குறைக்க நினைக்க வேண்டாம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தற்போதைய பிரதமர் மோடி, ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் வந்தவர்கள். அவர்கள் இந்த நாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட மட்டுமே தங்களை அர்ப்பணித்துள்ளனர். 

 

நான் பா.ஜ.க.வின் தலைவராக இருந்துள்ளேன். எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரவில்லை. அதே போல், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குடும்பத்திலும் யாரும் அரசியலில் இல்லை. அண்மையில் உத்தரப்பிரதேசம், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட தேர்தல்களில் பா.ஜ.க மாபெரும் வெற்றியை பெற்றது. தொடர் தோல்விக்கு பிறகு தான் நாட்டையே ஆளும் பெரிய கட்சியாக பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது. 1950ஆம் ஆண்டில் எங்கள் கட்சி ஒன்றுமே இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை ஆட்சியில் உள்ளோம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்