![Seeman says If Periyar wants, he can leave my party](http://image.nakkheeran.in/cdn/farfuture/KXkMqlOE_71teigP1FB2uKY4FoEGA2P85GrKjS3VxuI/1739179940/sites/default/files/inline-images/58_58.jpg)
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மை காலமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். அவருக்கு, திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேசமயம் தமிழகம் முழுவதும் சீமான் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான் பெரியார் குறித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்த இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதா லட்சுமி டெப்பாசிட் இழந்து திமுக வேட்பாளர் சந்திரகுமாரிடம் தோல்வியுற்றார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “சொந்த பெரியார் எனக்கு ஆயிரம் இருக்கும்போது எங்கிருந்தோ வந்த பெரியார் எனக்கு தேவையில்லை. பிரபாகரன் வீட்டில் சுபாஷ் சந்திரபோஸ், எம்.ஜி.ஆர் படம் இருந்தது; ஆனால் பெரியார் படம் எங்கே இருந்தது? எங்க அண்ணன் என்றைக்குப் பெரியாரை பற்றி பேசியிருக்கிறார். விடுதலை புலிகளை சாகடிக்க வேண்டும் என்று நினைத்தது திராவிடம். ஆனால் இன்றைக்கு அவனின் பிள்ளைகள் வந்து அடிக்கும்போது உயிரிழந்தவரை துணைக்கு அழைத்துக்கொண்டு வருகிறீர்கள். பெரியாரை உலகமே ஏற்றுக்கொண்டாலும் நான் எதிர்ப்பேன். நீங்கள் வேண்டுமானால் பெரியாரை கொண்டாடுங்கள் எனக்கு அவர் தேவையில்லை. என்னை பின்பற்றும் என் பிள்ளைகள், பெரியார் வேண்டுமென்றால் கட்சியில் இருந்து வெளியேறி போய்விடலாம்” என்றார்.