Skip to main content

“பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூர் செல்ல வேண்டும்” - ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published on 10/02/2025 | Edited on 10/02/2025

 

Rahul Gandhi insists PM Modi should visit Manipur immediately

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த 2023ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல், ஆளும் பா.ஜ.க அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையைமத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில், பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். மேலும், குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியுள்ளது. துணை ராணுவ படையினர், காவல்துறையினர் என ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறினாலும் தற்போது வரை மணிப்பூர் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பாமல் பதற்றத்துடனே காணப்படுகிறது.

அதே சமயம்  மாநிலம் மற்றும் மத்தியில் பாஜக கட்சியே ஆட்சி செய்யும் நிலையில் ஏன் இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வில்லை என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் வன்முறையை தடுக்க தவறிய மணிப்பூர்  மாநில முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுகுறித்து தொடர்ந்து மௌனம் காத்து வந்த முதல்வர் பிரேன் சிங் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். 

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சுமார் இரண்டு ஆண்டுகளாக பிரேன் சிங்  மணிப்பூரில் பிரிவினையை தூண்டினார். வன்முறை, உயிரிழப்புகள் நிகழ்ந்த போதிலும் பிரேன் சிங்கை பதவியில் தொடர பிரதமர் மோடி அனுமதித்தார். தற்போது மாநிலத்தின் அமைதியை மீட்டெடுப்பது மிக முக்கியமானது. பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூருக்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்டு, இயல்புநிலையை கொண்டுவருவதற்கான தனது திட்டத்தினை  விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்