Skip to main content

“மத்திய அரசு தரும் அல்வாதான் புகழ்பெற்றதாக இருக்கிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 07/02/2025 | Edited on 07/02/2025

 

halwa given by Central Government is famous CM MK Stalin  speech

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மொத்தம் ரூ. 1304.66 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். அதோடு ரூ.309.05 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும்,  75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “2023ஆம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று அனைவருக்கும் தெரியும். அதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் நன்றாக தெரியும். அந்த பாதிப்புகளிலிருந்து மீள, மத்திய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரன்  கோபித்துக்கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார்.

இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை செய்தோம். தொடர்ந்து மத்திய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுக்காத அவர்களை கண்டித்தோம். அப்போதும் வரவில்லை. நாடாளுமன்றத்திலும் பேசினோம். அப்போதும் வரவில்லை. ஏன், நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும் எவ்வளவு?. கேட்டது, 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய். வேறு வழியில்லாமல் மத்திய அரசு கொடுத்தது, வெறும் 276 கோடி ரூபாய். கேட்டதில் ஒரு விழுக்காட்டைக் கூட கொடுக்கவில்லை. இந்த பட்ஜெட்டிலாவது கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது. நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு. அவர்களை பொருத்தவரைக்கும், கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும் நிதியையும் கொடுப்பார்கள்.

இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா?. மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயர் இருக்க வேண்டாமா?. தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா?. தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா?. இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பா.ஜ.க.விடம் இருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட புகழ்பெற்றதாக இருக்கிறது. திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் மத்திய அரசை பொருட்படுத்தாமல், நமக்கு நாமே என்று தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறோம். அதனால்தான், மத்திய அரசு வெளியிடும் எல்லா புள்ளிவிவரங்களிலும் முன்னணியில் இருக்கிறோம்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்