மக்களவையில் மனைவிகளிடம் இருந்து காப்பாற்ற கணவர்களுக்கு தனி ஆணையம் வேண்டும் என்று நேற்று பாஜக வைச் சேர்ந்த எம்பி கோரிக்கை வைத்து, அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கோஷி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த எம்பி ஹரிநாராயன் ராஜ்பர். மக்களவையில் நேற்று கேள்விநேரத்துக்கு பின் எம்பி ஹரிநாராயன் எழுந்து பேசினார். அப்போது, பெண்கள் கொடுக்கும் பொய்யான புகாரில், சிக்கி ஏராளமான ஆண்கள் மனரீதியாக பாதிக்கப்டுகிறார்கள். பொய்யான வழக்குகளில் சிக்கி ஆண்கள் பலர் சிறையில் இருக்கிறார்கள். மனைவிகளின் கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஆதலால் ஆண்களைக் காக்க தனியாக ஆணையம் வேண்டும்.
அந்த ஆணையத்துக்குக் கணவர்கள் ஆணையம் என்று பெயரிட வேண்டும். தற்போது மகளிர் ஆணையம் செயல்படுவது போன்று, இந்த ஆணையம் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.பாஜக எம்.பி. நாராயண் பேச்சைக் கேட்டதும், அவையில் இருந்த மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். அவையில் 5 பெண் உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களும் லேசாகப் புன்னகை செய்தனர். ஆனால், அவர் இதில் ஆணித்தனமாக இருந்தார்.