பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைசி, "இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இன்று ஒரு சோகமான நாள். இப்போது, எந்த சதியும் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. தயவுசெய்து எனக்கு புரியவையுங்கள், ஒரு செயலை தன்னிச்சையாகத் தகுதி நீக்கம் செய்ய எத்தனை நாட்கள் முன்னேற்பாடு தேவை?
இது நீதிக்கான பிரச்சனை. இது மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தான பிரச்சனை. ஆனால் இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்து அரசியல் ரீதியாக வெகுமதி பெற்றனர். இந்த பிரச்சனை காரணமாகவே பாஜக ஆட்சியில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.