உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலமே மிதந்து வருகிறது. இந்நிலையில் மழை தற்போது குறைந்துள்ளது.
இந்த கனமழை தொடர்பான நிகழ்வுகளால், அம்மாநிலத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஐந்து பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப்படை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1300-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உத்தரகாண்டின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான குமான் பகுதியை ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநிலம் முழுவதும் பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், இயல்புநிலை திரும்ப சில காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 கோடி ரூபாய் வழங்க புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தசூழலில் இன்று, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று பார்வையிட உள்ளார். இதற்கிடையே ஹரியானா அரசு, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.