Skip to main content

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச பெருவிழா கொடி ஏற்றம்!

Published on 10/02/2025 | Edited on 10/02/2025

 

Thaipusam festival flag hoisting at Vadalur Sathya Gnana Sabha!

கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154 வது ஜோதி தரிசன விழாவையொட்டி, இன்று(பிப்.10)சத்திய ஞான சபையில் அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் சந்நிதியில் (இல்லம்) மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச்செய்த நற்கருங்குழியிலும், அவா் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மாா்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டது. இதையடுத்து சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பாா்வதிபுரம் கிராம மக்கள் பலவகை பழங்கள், சீா்வரிசைப் பொருள்களுடன், வள்ளலாா் பயன்படுத்திய பொருள்களையும் வள்ளலார் திருவுருவ படத்தையும் பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து ஒன்று கூடினர். பின்னர் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை -அருட்பெருஞ்ஜோதி’ என்று முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து (பிப்.10)காலை 10 மணியளவில் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

நாளை (பிப்.11) சத்ய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். தொடா்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ம் தேதி  காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதையடுத்து 13ம் தேதி வியாழன் கிழமை 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும். தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி இந்து அறநிலை துறை அதிகாரிகள் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துள்ளனர். வடலூரில் நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில்1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது மேலும் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்