Skip to main content

எதிர்ப்புகளைக் கடந்து நடைபெற்ற விசாரணை! - ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்குமா?

Published on 13/04/2018 | Edited on 13/04/2018

ஜம்மு சிறுமி ஆசிஃபா கொலைவழக்கில் பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

 

Asifa

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம், ரஸானா கிராமத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஆசிஃபா எனும் 8 வயது சிறுமி வனப்பகுதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். இந்தப் படுகொலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணை நடத்திவந்த காவல்துறை, நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவிற்கு முன்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகை, சிறுமி ஆசிஃபா எந்தளவிற்கு மிகக்கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டார் என்பதை விளக்குகிறது.

 

இந்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவிடாமல் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ‘இந்து ஏக்தா மன்ச்’ என்ற அமைப்பின் சார்பில் தேசியக்கொடி ஏந்தி நடத்தப்பட்ட பேரணியில் பாஜக மாநில அமைச்சர்கள் சவுத்ரி லால் சிங் மற்றும் சந்தெர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது. மேலும், இதனால் காவல்துறையினரின் விசாரணையிலும் மிகப்பெரிய தடைகள் உருவானது.

 

Asifa

 

இந்த வழக்கை மூடிமறைக்க பல முயற்சிகள் நடந்தும், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதை உணர்ந்த காவல்துறை குற்றப்பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஜல்லா மிகத்தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார். இவர் தனது விசாரணை தொடர்பான குற்றப்பத்திரிகையை கடந்த 9ஆம் தேதி, அதாவது நீதிமன்றம் விதித்திருந்த 90 நாட்கள் காலக்கெடுவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணைக் குழுவில் மிகக்கடுமையான வழக்குகளில் தீர்வு காண்பதில் திறமைவாய்ந்த நவீத் பீர்ஜாடா என்பவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் மிக முக்கியமான தடயமாக இருந்தது சிறுமியின் உடையில் இருந்த சகதிதான். அவை சிறுமி கிடந்த பகுதியில் இருக்கும் சகதியோடு ஒத்துப்போகவில்லை என்பதால், இதை முக்கிய தடயமாக காவல்துறையினர் எடுத்துக்கொண்டனர். ஆனால், மற்ற புகைப்படங்களில் சிறுமியின் உடையில் இருந்த சகதி காணாமல் போனநிலையில், தடயங்களைக் களைய காவல்துறையினரே உதவியிருப்பது தெரியவந்தது. மேலும், சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் கோவிலில் அது தொடர்பான எந்தத் தடயமும் முதலில் கிடைக்கவில்லை. ஆனால், முக்கியக்குற்றவாளி சாஞ்சி ராமின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில் அறையில் 8 விதமான தலைமுடிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் ஒன்று சிறுமி ஆசிஃபாவின் தலைமுடியோடு ஒத்துப்போனது. அதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

விசாரணை நடத்தச்சென்ற காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா, குற்றவாளிகளோடு சேர்ந்து சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு, தனது இடது தொடை மீது சிறுமியின் கழுத்தை வைத்து நெறித்துள்ளார். அது தோற்றுப்போகவே, குற்றவாளிகளில் ஒருவனான சிறுவன் அந்தச் சிறுமியின் கழுத்தை துணியால் நெறித்துள்ளான். அதிலும் திருப்தியடையாத அவர்களால்  சிறுமியின் தலைப்பகுதி இரண்டு முறை பாறையொன்றில் மோத வைக்கப்பட்டுள்ளது. சிறுமி கடத்தப்பட்ட முதல்நாளில் பாங்க்ரா எனும் போதைப் பொருளும், மற்ற நாட்களில் நீண்ட நேரத்திற்கு மயக்கம் தரும் குளோனாஜிபம் எனும் போதைமருந்தும் கொடுக்கப்பட்டதாக குற்றப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

 

இந்த வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளும் காப்பாற்றப் படுவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் சூழலிலும், துணிச்சலாக அவற்றை எதிர்கொண்டு காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. அரசியல் தலையீடுகளை முறியடித்து நடத்தப்படும்  நீதிப்போராட்டம் நிச்சயம் வெல்லவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது.

சார்ந்த செய்திகள்