வளமான பாரதம், வலிமையான பாரதம் என்ற வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவர் பிரதமர் மோடி. அவரது நான்காண்டு கால ஆட்சி குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், மோடியே வலிமை (STRENGTH) குறித்து பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சீன அதிபர் ஜி சிம்பிங் உடன் பிரதமர் மோடி சந்தித்தார். இருநாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வுகண்டு, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருக்கும் என சொல்லப்பட்டது.
வுகான் நகரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இந்தியாவின் வலிமை குறித்து விரிவாக பேசினார். வலிமையின் ஆங்கில உச்சரிப்பான STRENGTHஐக் குறிப்பிட்டு, அதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் விவரித்து பேசினார். அதில் S - ஆன்மீகம். T - பாரம்பரியம், வணிகம் மற்றும் தொழில்நுட்பம், R - உறவுமுறை, E - பொழுதுபோக்கு, A - கலை, N - இயற்கை, H - சுகாதாரத்துறை என பேசி முடித்தார். அவர் சொன்ன எழுத்துகளை இணைத்தால் STREANH என்ற அர்த்தமற்ற வார்த்தை மட்டுமே கிடைக்கும். தொடர்ந்து தனது கூற்றுக்கு விளக்கம் தரும் விதமாக S-T-R-E-N-G-T-H என உச்சரித்துவிட்டு முடித்துக்கொண்டார்.
உண்மையில் தெரிந்துதான் அவர் இப்படி பேசினாரா? அல்லது தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதை பேசிமுடித்துவிட்டு, பின்னர் அதை சரிசெய்து கொண்டாரா என்பது மோடிக்கு மட்டுமே தெரியும். எது எப்படியோ தன்னை வலிமையானவராக எப்போதும் காட்டிக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு, அந்த வலிமைக்கான ஸ்பெல்லிங் கூட தெரியவில்லையே என நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.