
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நேற்று (02-04-25) நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார். இந்த விவாதத்திற்கு, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிகளான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும், இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக எம்.பி ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்க பேசினர்.
12 மணி நேர தொடர் விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கு ‘வக்ஃப் வாரிய’ என்ற சட்டப்பூர்வ அமைப்பு உள்ளது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்கு கடந்த 1954ஆம் ஆண்டில் வக்ஃப் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின்படி, 1995ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் கீழ், பள்ளிவாசல்கள், மதராஸக்கள், அறக்கட்டளை போன்றவற்றை பராமரிப்பது மட்டுமல்லாமல், இந்த வாரியத்தில் இருந்து வரும் வருமானத்தை சேகரித்து மத, கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்ஃப் வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லோதோர் வக்ஃப் வாரியத்தில் இடம்பெறச் செய்வது, வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி கடந்தாண்டு மத்திய பா.ஜ.க அரசு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.