
நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேற்று (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த விவாதத்திற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. சுமார் 12 மணி நேர தொடர் விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில்நேற்று (03.04.2025) அதிகாலை நிறைவேறியது.
இந்நிலையில் மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு மூலம் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் 128 எம்பிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் 98 எம்பிக்கள் எதிராக வாக்களித்துள்ளனர். இருப்பினும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்த மசோதாவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். மசோதாவின் மீது பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரவாகவும் பேசாமல் எதிராகவும் பேசாமல் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளார். அதேநேரம் ஜி.கே.வாசன் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்து வாக்கு செலுத்தியுள்ளார். பாமக எம்.பி அன்புமணி இந்த வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதேபோல நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார்.