தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுதுவதும் இன்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம், சாலை மறியல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
அந்த வகையில், காஞ்சிபுரம் அச்சரப்பாக்கத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு திருமணத்தை நடத்தி முடித்து வைத்து விட்டு வெளியில் வந்த அவர், மதுராந்தகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது ஸ்டாலினுடன் புதுமணத் தம்பதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருமண விழாவில் பங்கேற்க வந்தவர்கள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் மணமக்கள் போராட்டக்களத்தில் இறங்கி போராடுவதை வியப்புடன் பார்த்ததோடு அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.