
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று நள்ளிரவு 2 மணி போல் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரஜுஜூ நேற்று (02-04-25) தாக்கல் செய்த வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிகளான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 12 மணி நேர தொடர் விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்த விவாதத்தின் போதுமக்களவையில் பேசிய பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர், “வக்ஃப் வாரியங்கள் ஊழலின் மையமாக மாறிவிட்டதால் அவற்றை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக வக்ஃப் வாரியம் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியும் பிற எதிர்க்கட்சிகளும் பொறுப்பற்ற முறையில் வக்ஃப் வாரிய சொத்துக்களை பயன்படுத்தி ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்து தங்கள் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தினர். இந்த மசோதாவை எதிர்ப்பதன் மூலம், காங்கிரஸ் மீண்டும் நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்குகிறது.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம், காங்கிரஸின் சமாதான அரசியலின் சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாக இருக்கும். சட்டத்தை மாற்றுவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படவில்லை. அரசியலமைப்பின்படி மட்டுமே நாடு நடத்தப்படுகிறது என்பதற்கான தெளிவான செய்தி உள்ளடக்கி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் அரசியலமைப்போடு நிற்பீர்களா? அல்லது வக்ஃபுவோரு நிற்பீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த நிலையில் மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதம் இன்று (03-04-25) நடைபெற்று வருகிறது. அனுராக் தாக்கூர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்து வருகிறது. போராட்டங்களும் வலிகளும் நிறைந்தது. ஆனால், நான் எப்போதும் பொது வாழ்வில் உயர்ந்த மதிப்புகளை நிலைநிறுத்தி வந்துள்ளேன். கிட்டத்தட்ட 60 ஆண்டுகால அரசியலுக்குப் பிறகு, நான் இதற்கு தகுதியானவன் அல்ல. நேற்று, மக்களவையில் அனுராக் தாக்கூர் என் மீது முற்றிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார். எனது சக எம்.பிக்கள் எதிர்த்தபோது, அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அனுராக் தாக்கூரின் தாக்குதல் எனது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால் நாடாளுமன்றத்தில் அமர அவருக்கு உரிமை இல்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நான் ராஜினாமா செய்வேன். வக்ஃப் நிலத்தின் ஒரு விஷயத்தையாவது நான் அல்லது என் குழந்தைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் நிரூபித்தால், நான் ராஜினாமா செய்வேன். நான் இவற்றிற்கு பயப்படவில்லை. நான் ஒரு தொழிலாளியின் மகன்” என்று சவால் விடுத்து பேசினார்.