பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்து ஏற்கனவே நக்கீரன் செய்தி வெளியிட்டது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியரை 15-03-2019 அன்று ஆஜராகுமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அந்த தேதியில் ஆசிரியர் ஊரில் இல்லாத காரணத்தினால் அவரது சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி போலீஸ் அனுப்பியிருக்கும் சம்மன் சமீபத்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமையவில்லை என்பதால் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று விளக்கம் கொடுத்திருந்தார். இதையடுத்து, 16-03-2019 அன்று முதல் தகவல் அறிக்கை நக்கீரன் ஆசிரியர் மீது பதிவு செய்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41 (ஏ)-ன்படி 21-ந்தேதி ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு 19-03-2019 அன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி ஏற்கனவே, பொள்ளாச்சி தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டிருப்பதால் இந்த வழக்கையும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப உள்ளோம் என்று கூறினார்.
இதன் பின்னர், 20-03-2019 அன்று சென்னை உயர்நீதிமன்றம் நக்கீரன் ஆசிரியர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும் உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு, சி.பி.சி.ஐ.டி. தெற்கு மண்டல(சென்னை எழும்பூர்) கண்காணிப்பாளர், நக்கீரன் ஆசிரியரை 25-03-2019 அன்று தான் கோவையில் முகாமிட்டிருக்கும் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தார்.
அந்த சம்மனை 25-03-2019 மதியம் பெற்றுக் கொண்ட நக்கீரன் ஆசிரியர், உடனடியாக அந்த சம்மன் குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளருக்கு விளக்கமான பதிலை அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இன்று 27-03-2019 அன்று அதே சி.பி.சி.ஐ.டி. தெற்கு மண்டல கண்காணிப்பாளர், நக்கீரன் ஆசிரியருக்கு மீண்டும் ஒரு சம்மன் அனுப்பி 30-ந்தேதி ஆஜராக கோரியுள்ளார்.
அரசு ஏற்கனவே பொள்ளாச்சி வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டும் உயர்நீதிமன்ற உத்தரவிலும் அது பதிவு செய்யப்பட்ட பிறகும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை என்ற பெயரில் நக்கீரன் ஆசிரியருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர்.
சென்னையில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி. தெற்கு மண்டல கண்காணிப்பாளர், தான் கோவையில் முகாமிட்டிருப்பதால் சென்னையில் இருக்கும் நக்கீரன் ஆசிரியரை கோவைக்கு வந்து ஆஜராகச் சொல்லி தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவது அவரின் பத்திரிகை பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கமாகும்.