காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. 11 ஆண்டுகளுக்குப்பிறகு காவிரி பிரச்னைக்காக இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் அண்மையில் இறுதித்தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான பங்கை குறைத்து பெங்களுரு குடிநீர் தேவைக்காக அதனை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்ட ஆலோசனை நடைபெற்றது. கடந்த 19-ஆம் தேதி ஏற்கனவே சட்ட ஆலோசனை நடைபெற்ற நிலையில், நேற்று 2-ஆவது முறையாக சட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி சார்பில் பிரதிநிதிகளுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பில் தலா ஒருவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 10 விவசாய சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.