Skip to main content

அது கரோனாவைத் தாண்டிய வலி! ரத்தத்தில் இருந்து துடைக்கப்பட வேண்டும்! கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு பேட்டி!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

ghj


கரோனா தொற்றில் உலகமே சிக்கித் தவித்து வருகின்றது. உலக நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் நாம் எப்போது முதல் இடத்துக்கு வருவோம் என்று நாம் கரோனாவுக்கு முன்பு வரை நினைத்திருந்த நிலையில் இன்று நோய்த்தொற்றில் வல்லரசு நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கும் அவல நிலையை நாம் இன்று பார்த்து வருகின்றோம்.

 


இந்த நோய்த்தொற்றில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியாளர்களையும் தாண்டி, கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என அனைவரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த கரோனா தொற்று தொடர்பாகவும், அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் தாக்கப்பட்ட சமயத்திலும் அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் சில முக்கியக் கேள்விகளை முன் வைத்தோம். அவருக்கே உரிய பாணியில் தெளிவாகவும், நுட்பமாகவும் பதில் அளித்துள்ளார்.  

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் எல்லோருமே சிரமமாக வாழ்க்கை நடத்த வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருகின்றோம். படைப்பாளிகளைப் பொறுத்த வரையில் எப்போதுமே தனிமையை விரும்புவார்கள், அமைதியை விரும்புவார்கள். நீங்கள் கவிப்பேரரசு. இன்று ஊரே அடங்கிப்போய் இருக்கின்றது. இந்த அமைதியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்தச் சூழலை ஒரு படைப்பாளியாக எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் ஆழமான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இதற்கு நான் உணர்ந்த பதிலைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். கவிஞன், படைப்பாளன் தனிமையை விரும்புகின்றவன்தான், நிசப்தத்தை விரும்புகின்றவன்தான். ஆனாலும் கூட மக்களுக்கு மத்தியில் தனிமையில் இருப்பதுதான் தனிமை. மவுனம் என்பது ஓசைகளுக்கு மத்தியில் கிடைக்கின்ற இடைவெளி தான் நிசப்தம்.  இன்றைக்கு இருக்கின்ற அமைதி என்பது ஒரு மயான அமைதி போல தோன்றுகிறது. இன்று இருக்கின்ற நிசப்தம் என்பதே ஒரு இரங்களுக்கான நிசப்தம் போன்று தோன்றுகிறது. ஆரவாரத்துக்கு மத்தியில் கிடைக்கின்ற தனிமையும், ஓசைகளுக்கு மத்தியில் கிடைக்கக் கூடிய நிசப்தமும்தான் ஒரு கவிஞன், படைப்பாளன் நேசிக்கக்கூடிய தருணங்கள்.

ஆனால் தற்போது இருக்கின்ற தனிமை என்பது நல்ல தனிமை அல்ல. இன்று இருக்கின்ற நிசப்தம் என்பது நல்ல சமிக்ஞை அல்ல. அதனால் இந்தத் தனிமையை என்னால் முற்றிலும் நேசிக்க முடியவில்லை. இந்த மவுனத்தை என்னால் ஆராதிக்க முடியவில்லை. இந்த மக்கள் சமூகம் இதில் இருந்து மீண்டு வர வேண்டுமே என்ற கவலை எங்களை ஆட்கொண்டுள்ளது. நான் மட்டும் பாதுகாப்பாய் இருக்கின்றேன் என்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நான் மட்டும் பாதுகாப்பாய் இருக்க முடியாது. நானும் இந்த மனிதச் சங்கிலியில் ஒருவன். இந்தச் சமூகத்தின் பாதுகாப்பே என்னுடைய பாதுகாப்பு. எனவே இந்த மவுனத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.

 


உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் கடந்த வாரம் மாமல்லபுரம் வரை காரில் சென்றிருந்தேன். அப்போது காரின் இரு பக்கமும் பார்த்தால் அந்த வெறுமையை, அந்த ஏக்கம், அதில் இருக்கும் மரண தொணியை என்னால் தாங்கவே முடியவில்லை. நான் பார்த்த கடலா, நான் பார்த்த கடற்கரையா, மக்கள் இல்லாமல் சாலை எதற்கு, மனிதம் இல்லாமல் பூமி எதற்கு என்று எனக்குத் தோன்றியது. எனவே இந்தத் தனிமையை எங்களால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லை.  இந்த இடைவெளியை எங்களால் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் ஒன்று சொல்கிறேன், எழுதுவதற்கு ஒரு கோழி அடை காப்பதற்கு கூண்டிற்குள் இருக்கும் வெப்பம் இப்போது எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதனால் கோழி தனது கதகதப்பின் வெப்பத்தில் முட்டைகளைக் குஞ்சி பொறிப்பதற்குப் பயன்படுத்துகின்றதோ, அதைப்போல இந்தத் தனிமையின் கதகதப்பில் இந்தச் சோகத்தின் வெப்பத்தில் நிறைய படைப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகளை நாங்கள் அடைந்திருக்கின்றோம் என்பது மட்டும் தான் கொஞ்சம் ஆறுதல். 

 

hj



நிறைய படைப்புகள் வருவது என்பது மகிழ்ச்சியான செய்தி. கலைகள் யாவும் மக்களுக்காக என்று மாவோ சொன்ன கூற்றைத்தான் பலரும் மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் இன்று மக்கள் மனநிலை எதையும் ரசிக்கக் கூடியதாக இல்லை. நாம் உயிர் வாழ்ந்தால் போதும், உணவு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கின்றது. அப்படி இருக்கையில் கலைகளும், இலக்கியமும் இரண்டாம் பட்சம் ஆகின்றது. அதைக் குறித்து உங்கள் கருத்து என்ன? 

இதுவும் நல்ல கேள்விதான். ஆனால் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். இப்போதுதான் கலையின் தேவை கூடியிருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். இப்போதுதான் கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக நான் நினைக்கின்றேன். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் மக்களுக்கு நம்பிக்கை தேவை, மக்களுக்குக் களிப்பூட்டுவது மட்டுமே கலை அல்ல, மக்களுக்குத் தெளிவூட்டுவது கலை. மக்களைப் பரவசப்படுத்துவது மட்டுமே இலக்கியம் அல்ல, மக்களை உயிர்ப்பிப்பது இலக்கியம். அதனால் இன்றைக்குக் கலைஞர்களும், படைப்பாளிகளும்தான் மக்களின் துவண்டு போன இதயத்தினை தூக்கி நிறுத்துகின்ற பணியினை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். என் சக படைப்பாளிகளும் அதையே விரும்புகிறார்கள். அதையே செய்து கொண்டு இருக்கிறார்கள்.

உங்களிடம் ஒன்று கூற வேண்டும். இந்தக் காலத்தில்தான் தமிழர்களிடம் வாசிப்புப் பழக்கம் என்பது அதிகரித்துள்ளது என்பது ஒரு கூடுதல் தகவல். அதிகமான படங்கள் பார்த்தும் இந்த இடைப்பட்ட காலத்தில்தான். புத்தகங்கள் மறுவாசிப்புக்கு ஆளானதும், புதிய புத்தகங்கள் வாசிப்புக்கு ஆளானதும் இந்தக் காலகட்டத்தில்தான். எனவே மக்கள் தங்கள் வெறுமையைக் கலை கொண்டு நிரப்பிக்கொள்கிறார்கள் என்பது இதில் இருந்து புலப்படுகின்றது. ஆனால் வயிறு பசித்திருக்கும் போது இலக்கியம் ஒன்றும் செய்ய முடியாது. வயிற்றுப் பசியை நிரப்பாமல் இலக்கியம் பூரணமாக முடியாது. இலக்கியம் என்பதும் உபரிதான், கலை என்பதும் உபரிதான்,  பசித்த மனிதன் அவனது உணவுத்தேவையை நிறைவேற்றிய பிறகுதான் அவன் கலையை நோக்கி நகர்கின்றான். எங்கள் மக்கள் பசித்தும் வேலை இழந்தும், வெறுமையிலும் வாடிக்கொண்டிருக்கின்ற போது, கலை இலக்கியம் அதை மறந்துவிட்டு அழகியல் ஆபரணம் ஆகிவிடக்கூடாது என்பதை எழுத்தாளன் உணர்கிறான். 

நீங்கள் கூறுவது போல இந்த ஊரடங்கு காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உழைக்கும் சமூக மக்கள்தான். பல ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளில் நடந்து சென்றதும், மிதிவண்டியில் சென்றதும் அவர்கள்தான். இன்னும் பல இடங்களில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அந்தக் காட்சிகளை நீங்களும் பார்த்திருப்பீர்கள், அந்த உழைக்கும் மக்கள் நாங்கள் அதிகம் உழைப்பைச் செலுத்தியும் எதையும் பெரிதாகப் பெறவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

இதுகுறித்து என் சுட்டுரை பக்கத்தில் நான் எழுதியதை மீண்டும் நினைவூட்ட வேண்டிய இடத்தில் நான் இருக்கின்றேன். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தங்க நாற்கர சாலைகள் திட்டத்தில் அனைத்து சாலைகளும் இணைக்கப்பட்டது. அதை மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன். மிகப்பெரிய தேவையாக நினைக்கிறேன். ஆனால் அந்தத் தேசிய நெடுஞ்சாலைகள் வாகனங்கள் செல்வதற்குத்தானே தவிர பாதசாரிகள் நடந்து செல்வதற்கு அல்ல, என்று சுட்டுரை பக்கத்தில் கூறி இருக்கின்றேன்.

 

http://onelink.to/nknapp


நெடுஞ்சாலைகள் என்பவை பாதசாரிகளுக்கு அல்ல, தண்டவாளங்கள் என்பவை தற்கொலைக்கு அல்ல, விஷம் என்பது உணவல்ல. தண்டவாளங்களே இன்றைக்குத் தற்கொலை இடங்களாக இருப்பது உழைக்கும் மக்களுக்கு நேர்ந்த பெரிய அவலமான நிலையாகும். ஒரு தாய் இறந்து கிடக்கிறாள். அதுதெரியாத அவள் குழந்தை அவளைச் சுற்றி விளையாடும் காட்சிகளைப் பார்த்து உடைந்து விட்டேன். சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட அவலத்தை பார்க்க வேண்டியுள்ளதே என்று நெஞ்சம் நொறுக்கிவிட்டது. 'நடந்தவை நடந்துவிட்டது, இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்ற அண்ணாவின் வாசகத்தைத்தான் தற்போது நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கின்றது. எதிர்காலத்தில் இப்படி ஒரு துன்பம் நேர்ந்தால் இந்தத் தொழிலாளர் பெருமக்களை காப்பாற்ற என்ன தொலைநோக்கு திட்டம் இருக்கிறது என்பதை அறிவாளிகளும், அரசுகளும் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மனிதம் மட்டுமே முக்கியமாக கருதப்பட வேண்டிய இந்த காலகட்டத்திலும், சாதி மத ஏற்றத்தாழ்வுகள் பேசப்பட்டு வருகின்றன. அதனை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். குறிப்பாக அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. உங்களின் பாடல் வரிகள் கூட அந்த போராட்ட உணர்வை அதிகம் வெளிப்படுத்தியது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

அமெரிக்கா என்பது செவ்விந்தியர்களின் தேசம். ஒரு செவ்விந்தியர்களின் தேசத்தை பிரிட்டிஷார் பிடித்தார்கள். பிரிட்டிஷார் பிடிக்கின்ற போது செவ்விந்தியர்களின் அம்புகளுக்கு அவர்கள் அஞ்சினார்கள். செவ்விந்தியர்கள் அங்கே பூர்வக்குடிகள். விஷம் தோய்த்த அம்புகளுடன் வேட்டையாடத் தெரிந்தவர்கள், வீரர்கள். அவர்களை எதிர்கொள்ளத் தெரியாத பிரிட்டிஷார் ஒரு யுக்தியை கையாண்டார்கள். என்னுடைய ’சிகரங்களை நோக்கி’ என்ற படைப்பில் இதை நான் பதிவு செய்திருக்கின்றேன். பூர்வக்குடிகளை சூழ்ச்சியால் கொன்று வென்றெடுக்கப்பட்ட தேசம்தான் அமெரிக்கா. அந்த அமெரிக்காவில் பன்னாட்டு சமூகம் குடியேறிய போது, ஆப்பிரிக்காவில் இருந்து கறுப்பின மக்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டார்கள். அந்த நாட்டை கட்டி எழுப்பியவர்கள் கறுப்பின மக்கள். ஒவ்வொரு மாளிகைக்குக் கீழும் கறுப்பின மக்களின் எலும்புக் கூடுகள் இருக்கின்றது. அவர்களை பயன்படுத்திக் கொண்ட பிறகு அவர்களை இழிவு செய்வதும், அவர்களின் உரிமைகளை மறுப்பதும், அவர்களின் மானம் பறிக்கப்படுவதும் எந்த வகையில் நியாயம் என்பதுதான் இன்று உலகம் முழுவதும் எழுந்துள்ள கேள்வி.

இப்போது கூட கொலம்பஸின் சிலையை அங்கே வீழ்த்திவிட்டார்கள் என்று நான் கேள்விப்படுகின்றேன். கொலம்பஸ் என்பவர் அமெரிக்காவை கண்டுப்பிடிக்காமல் விட்டிருந்தால் கூட இன்னொருவரால் அமெரிக்கா நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். கொலம்பஸ் அந்த நாட்டை கண்டுபிடித்ததால் வந்த கேடு அல்ல இது. வெள்ளை ஆதிக்கம் என்ற மன உணர்வுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கின்றேன். கொலம்பஸ்-க்கும் வெள்ளை உணர்வுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. கொலம்பஸ் ஒரு இத்தாலியன். வெள்ளை ஆதிக்கம் என்பது அதற்கு முன்னும் இருக்கின்றது, அதற்குப் பின்னும் இருக்கின்றது. எனவே கொலம்பஸ் சிலையை அகற்றுவதற்கு மாறாக நிறவெறிக்கு எதிராகவும், கறுப்பின மக்களுக்கு ஆதரவாகவும், நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான் எங்களை போன்றவர்களின் ஆதங்கம்.

கரோனா என்பது உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்ற பெரிய நோய். கரோனாவின் தாக்கத்தையும் தாண்டி நிறவெறிக்கு எதிரான போர் அங்கே உச்சத்தில் வந்திருக்கிறது என்றால், எவ்வளவு வீரியமிக்க வலி என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். உலக நாடுகள் எல்லாம் நிறவெறிக்கு எதிராக அவ்வபோது தீர்மானம் போடுவதும், சில நேரங்களில் கறுப்பின மக்களில் ஓரிருவருக்குப் பதவி கொடுத்து தாங்கள் கறுப்பின மக்களுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டிக்கொள்வதும் ஒரு தீர்வாக முடியாது. நிறவெறி என்பது ரத்தத்தில் இருந்து துடைக்கப்பட வேண்டும்.  நிறவெறி என்பது ஒரு உளவியல் பிரச்சனை. அந்தப் பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களை போன்றவர்களின் கோரிக்கையாக உள்ளது.