எதிர்பார்த்த மாதிரியே தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது தி.மு.க. கூட்டணி. ஆனால் எதிர்பாராத அளவுக்கு சிலபல தொகுதிகளில் தினகரனின் அ.ம.மு.க.வை பின்னுக்குத் தள்ளி கமலின் மக்கள் நீதி மய்யமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் வாக்குகள் பெற்றள்ளன. 2009-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனார் சீமான். இவர் கட்சி ஆரம்பித்த அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார். 2011-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' எனச் சொல்லி வெளிப்படையாகவே அ.தி.மு.க.வை ஆதரித்தார்.
2016 சட்டமன்றத் தேர்த லில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் கணிசமான வாக்குகளை வாங்கியது. இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு, நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப் பட்டது. இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி யைவிட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியைத்தான் அதிகம் விமர்சித்தார் சீமான்.
2018 பிப்ரவரி 21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமல். கட்சி ஆரம்பித்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார் கமல். கட்சி ஆரம்பித்து பதினைந்து மாதங்களில் வந்த நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது மக்கள் நீதி மய்யம். 40 எம்.பி. தொகுதிகளிலும் 22 எம்.எல்.ஏ. தொகுதி களிலும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்தார் கமல். இரண்டு கூட்டணிகளையுமே சரமாரியாக விமர்சித்த கமல், "சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே' என அரவக்குறிச்சியில் அதிரடி கிளப்பினார்.
பிரச்சார மேடைகளில் உணர்ச்சிப் பொறி பறக்க சீமான் பேசினார் என்றால், ஆரவாரம் இல்லாமல் அமைதியாக பேசினார் கமல். இந்த இருவரின் பிரச்சார பாணிக்கும் மக்களிடம் கிடைத்த வரவேற்பின் அளவுதான் அக்கட்சிகள் பெற்ற வாக்குகள். கோவை எம்.பி. தொகுதி யில் ம.நீ.ம.வின் வேட்பாளர் மகேந்திரன் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கி மூன்றாம் இடத்திலும், பொள் ளாச்சி ம.நீ.ம.வின் வேட்பாளர் மூகாம்பிகை மூன்றாம் இடத்திலும், வடசென்னை வேட்பாளர் மூன்றாம் இடத்திலும், ஈரோடு, நாகை, கடலூர் தொகுதிகளின் வேட் பாளர்கள் நான்காம் இடத்திற்கும் வந்து ஆச்சர்யப்படுத்தி னார்கள். பல சட்டமன்றத் தொகுதிகளில் அ.ம.மு.க. வேட் பாளர்களை பின்னுக்குத் தள்ளி னார்கள் மக்கள் நீதி மய்யம் வேட் பாளர்கள். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தஞ்சை, ஈரோடு, நாகை, வடசென்னை, கடலூர், மயிலாடுதுறை, கோவை உட்பட 6 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தனர். இதே போல் பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தனக்கான வாக்கு களை வாங்கி கவனம் ஈர்த்துள்ளது நாம் தமிழர் கட்சி.
நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் நாங்கள் வாங்கியிருக்கும் வாக்குகள், எங்கள் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் கைகொடுக்கும். எங்களின் வாக்கு வங்கி, பல கட்சிகளை யோசிக்க வைக்கும். அடுத்து வரும் தேர்தலில் எங்கள் தலைவர் கமலின் வியூகம் இன்னும் சிறப்பாக இருக்கும், வெற்றியும் எங்கள் வசப்படும்''’என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கோமகன். இந்த இரு கட்சிகளும் பெற்ற வாக்குகள், டெபாசிட்டை மீட்பதற்குப் பயன்படவில்லை. பெரிய கட்சிகளுக்கு சவாலை ஏற்படுத்த இன்னும் பலம் தேவை. எனினும் கமல், சீமான் என்ற சினிமா பிரபலங்கள் இனிவரும் தேர்தல் களத்தில் விறு விறுப்பையும் சுறுசுறுப்பையும் கூடுதலாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.