இன்றைக்கு 26 ஆவது சர்வதேச பத்திரிகை சுதந்திர நாள். உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் மிகப்பயங்கரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் நாடுகளில் சீனா, வடகொரியா, அரபு நாடுகள், எகிப்து உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை குறிப்பிடுகிறார்கள். இந்தியா, ரஷ்யா, ஆப்பிரிக்காவின் மத்திய நாடுகள், வெனிசூலா, மத்திய அமெரிக்க நாடுகள் கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும் நாடுகள் பட்டியலில் உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் திருப்திகரமான நிலையிலும், ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகள் மிக நல்ல நிலையிலும் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளன.
1991 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் உள்ள விண்டோக் என்ற நகரில் உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கவும், பத்திரிகையாளர்களை பாதுகாக்கவும் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. யுனெஸ்கோ பங்கேற்ற அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஆண்டுதோறும் மே மாதம் 3 ஆம் தேதியை பத்திரிகை சுதந்திர நாளாக கடைப்பிடிக்க ஐ.நா. அறிவித்தது.
1.பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாடுகளை கொண்டாடுவது…
2.உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிடுவது…
3.ஊடகங்கள் மீதான தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாப்பது…
4.பணியில் இருக்கும்போது தங்கள் உயிரை இழந்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துவது… என பல காரணங்களுக்காகவும் இந்த நாள் பயன்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவதொரு நாட்டில் யுனெஸ்கோ சார்பில் மே 1 முதல் 3 ஆம் தேதிவரை பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு தலைப்பும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஐ.நா. கொடுத்திருக்கும் தலைப்பு…
“ஜனநாயகத்துக்கான ஊடகம் : தவறான தகவல்கள் நிரம்பிய காலகட்டத்தில் தேர்தல்களும் இதழியலும்!”
இது பொருத்தமான தலைப்புதான். ஆம், இந்திய தேர்தலையே எடுத்துக் கொண்டாலும் ஆளுங்கட்சி பரப்புகிற பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்கள், அந்தப் பொய்களையே செய்திகளாக பரப்பிக்கொண்டிருக்கின்றன. அட்டூழியங்களையும், அப்பாவிகளுக்கு எதிரான கொடுமைகளையும் அம்பலப்படுத்தி தோலுரிக்க வேண்டிய ஊடகங்கள் ஆதிக்கவாதிகளுக்கு சாமரம் வீசும் நிலையே நீடிக்கிறது.
சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்தின் அக்கிரமங்களை எதிர்த்து குரல் எழுப்பும் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் கொடூரமான கொலைசெய்யும் போக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் சவூதி அரேபிய இளவரசரின் தவறுகளை அம்பலப்படுத்திய கஷோகி என்ற பத்திரிகையாளர் கொடூரமாக கொல்லப்பட்டார். துருக்கி நாட்டில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவரை கொன்று ஆசிட் ஊற்றி உருத்தெரியாமல் அழித்த சம்பவம் உலகையே பதறவைத்தது. ஆனால், இந்தக் கொலைக்கு காரணமான சவூதி இளவரசர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரான கவுரி லங்கேஷ் அவருடைய வீட்டின் முன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் பாஜகவின் அனியாயங்களை எழுதியதற்காகவே இந்த தண்டனை.
விடுதலைக்கு பிறகு இந்தியா எத்தனையோ பிரதமர்களை சந்தித்து இருக்கிறது. எல்லோருமே பத்திரிகை சுதந்திரத்தை மதித்திருக்கிறார்கள். பத்திரிகையளர்களை சந்தித்து நாட்டு நிலைமையை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு பயணத்தின்போது பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள். வெளிநாடு ஒன்றுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து இந்திய பத்திரிகையாளர்களிடம் விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பது அவர்கள் வழக்கம். நாடு திரும்பும்போது விமானத்திலேயே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள்.
ஆனால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்கவே மறுத்து ஐந்து ஆண்டுகளை கடந்துவிட்ட ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். ஆனால், பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்து தனது பதவிக்காலம் முழுவதையும் கடத்திய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும்தான் பலம் வாய்ந்தவர்கள் என்றும் இரும்பு மனுஷி, துணிச்சல் மிகுந்தவர் என்று ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றன.
இன்னொரு இரும்பு மனுஷி இருந்தார். அவர் பெயர் இந்திரா காந்தி. 1975 ஆம் ஆண்டு அவருடைய தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அரசுக்கு எதிரான செய்திகள் வெளியிடுவதையும், அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்துவதையும் தடைசெய்தார். முக்கியத் தலைவர்கள் அனைவரையும் தேசத்துரோக சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.
அப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில்கூட தணிக்கையாளர்களின் கண்களில் மண்ணைத்தூவி, தனது கருத்துகளை தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு கொண்டு சேர்த்தவர் கலைஞர் ஒருவர்தான். உலகில் அதுவரை யாருமே கடைப்பிடிக்காத வழிமுறைகளை அவர் கண்டுபிடித்தார். ஆம், உலக வரலாறு, சங்க இலக்கியம் ஆகியவற்றில் இருந்து நடப்புக் காலத்துக்கு தகுந்த சம்பவங்களை எடுத்து எழுதி நாட்டு நடப்புகளை தனது தொண்டர்களுக்கு மறைமுகமாக புரியவைப்பதில் வெற்றிபெற்றார் கலைஞர். கட்சித் தொண்டர்களை சந்திப்பதற்கு அவர்கள் வீட்டு திருமணங்களையும், சுக நிகழ்வுகளையும், துக்க நிகழ்வுகளையும் பயன்படுத்தினார். பொதுக்கூட்டங்களுக்குப் பதிலாக அரங்கக்கூட்டங்களை பயன்படுத்தினார். அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பதால், அந்தக்கூட்டங்களில் பொருத்தமான கதைகளை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதில் வெற்றிபெற்றார்.
பத்திரிகைகளின் குரல்வளையை நெறித்து, பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரத்தை பறித்த இந்திராவை 1977 தேர்தலில் இந்திய மக்கள் படுதோல்வியடையச் செய்தனர்.
இன்றைக்கு இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இல்லை. ஆனால், பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆம் இன்றைக்கும் அரசின் ஊழல்களை, தவறுகளை, அக்கிரமங்களை எழுதுவதற்கு பெரும்பாலான ஊடகங்கள் அஞ்சும் நிலை இருக்கிறது. அரசுக்கு எதிரான மீடியாக்களை முடக்கும் முயற்சிகளை மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் தொடர்ந்து மேற்கொள்கின்றன. தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு இந்த அரசுகள் இடையூறு செய்கின்றன. பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தி மிரட்டுகின்றன.
மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறுகிற நிலையில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் தேர்தல் விதிமுறைகளை மீறும் பிரதமரையும், ஆளுங்கட்சியினரையும் அம்பலப்படுத்த மீடியாக்களால் முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் தேர்தல் வேலைகளை முடக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தவும் மீடியாக்கள் தயங்குகின்றன.
ராணுவத்தின் செயல்பாடுகளையும், மதம்சார்ந்த விஷயங்களையும் தேர்தல் லாபத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களும் அறிவுறுத்திய நிலையிலும் பிரதமர் மோடி எந்தவித தயக்கமும் இல்லாமல் ராணுவவீரர்களின் தியாகத்தை தனது தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்.
மத்திய, மாநில அரசுகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் செயல்படும் பத்திரிகைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய விமானப்படைக்கு வாங்கிய ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பான ஆவணங்கள் குறித்து உச்சநீதிமன்றத்திலேயே தவறான தகவல்களை கொடுத்த மோடி அரசின் மோசடியை தி ஹிண்டு பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்கள் மிகத் துணிச்சலாக அம்பலப்படுத்தினார். இதற்காக ராணுவ அமைச்சகத்திலிருந்த ரஃபேல் விமான பேரம் தொடர்பான ஆவணங்களை அவர் ஹிண்டு நாளிதழில் வெளியிட்டார். இதை திருட்டுத்தனம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறினாலும், உச்சநீதிமன்றம் அந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
அதுபோலவே, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதுசெய்யப்பட்ட நிர்மலாதேவி தொடர்பான வழக்கில் ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின்பேரிலும், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான செய்திகள் குறித்தான புகாரின் பேரிலும் நக்கீரன் ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கு நீதிமன்றங்களே பாதுகாப்பாக நின்றன.
ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகைகளின் சுதந்திரத்தை அரசு நிர்வாகம் சேதப்படுத்தினாலும், மற்றொரு தூண் ஆகிய நீதித்துறை காப்பாற்ற முன்வருவதே இந்திய ஜனநாயகத்தின் மாண்பு. எல்லாவற்றையும் மீறி அரசு பத்திரிகை சுதந்திரத்தை அழிக்க முயன்றால் இந்திய மக்களே அந்த முயற்சியை முறியடித்து பாடம் புகட்டிய வரலாறும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு.
இந்திய ஜனநாயகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்பட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் இருந்த பத்திரிகை சுதந்திரம் கூட இன்று இல்லை என்று வருத்தப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குயுட்டெரெஸ் பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்…
“நம்பகமான, பொருத்தமான தகவல்களுடன் இயங்காத ஜனநாயகம் நிறைவுபெறாது”
மக்களிடம் இருந்து உண்மையை அரசு மறைத்தால், அந்த உண்மையை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டியது பத்திரிகையாளனின் கடமை என்று சமீபத்தில் ஹிந்து என்.ராம் கூறியிருந்ததையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.