எழுபது ஆண்டுகால இந்திய அரசியலில் மிக முக்கியமான குடும்பமாக இருப்பது நேருவின் குடும்பம். அந்தக் குடும்பத்திலிருந்து இதுவரை இந்தியாவிற்கு மூன்று பிரதமர்கள் கிடைத்துள்ளனர். தற்போது இந்தக் குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் இந்திய அரசியலில் இருக்கிறது.
ராகுல் காந்தி நேருவின் நான்காவது தலைமுறை, காங்கிரஸின் தற்போதைய தலைவர். காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருந்தால் இந்தியாவின் பிரதமர் ஆகியிருக்கக்கூடியவர். இவர் முதன் முதலில் 2004ஆம் ஆண்டு இந்திய தேர்தல் அரசியலில் கால் எடுத்து வைத்தார். அதற்கு முன்பு வரை வெளிநாட்டில் படிப்பு, வேலை என்று சாதாரண மனிதராக வாழ்ந்திருக்கிறார்.
இவருடைய தந்தை போட்டியிட்ட அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தியும் முதன் முறையாக மே மாதம் 2004ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்காக இவருடைய தங்கை பிரியங்கா பிரச்சாரம் மேற்கொண்டார், அதனை அடுத்து அவர் போட்டியிட்ட ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ராகுல்காந்திக்காக பிரியங்காகாந்தி அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 2004ஆம் ஆண்டு அமேதியில் போட்டியிட்ட ராகுல் 3,90,179 வாக்குகள் பெற்றார். இதனை அடுத்து 2009, 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்டு 71.78%, 46.71 % வாக்குகளை பெற்றார். இந்த வருடம் நடைபெறும் போதுத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அமேதி தொகுதியில் ஸ்ருதி இராணிக்கும் ராகுலுக்கும் வலுவான போட்டி நிலவி வருகிறது. வயநாட்டில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார் ராகுல்.