தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலையில், தனக்கு குக்கர் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்எல்ஏவான டி.டி.வி. தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தபோது தங்கள் அணிக்கு வழங்கப்பட்ட, ‘அ.தி.மு.க. அம்மா’ என்ற பெயரையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரியிருந்தார்.
டிடிவி தினகரன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் டிடிவி தினகரன் தனது புதிய கட்சிக்கு பரிந்துரை செய்த அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர். அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் ஆகிய 3 பெயர்களில் ஒன்றை அளிக்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் பேசிய டி.டி.வி. அணியின் தங்கத் தமிழ்ச்செல்வன்,
அதிமுகவில் பிளவு வந்த பின்னர், அதிமுக என்ற கட்சியையும், இரட்டை இலையையும் கேட்டோம். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிக்கு கொடுத்துவிட்டது தேர்தல் ஆணையம். திடீரென்று தேர்தல் வந்தால் எங்களுக்கு கட்சியும், சின்னமும் வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குக்கர் சின்னமும் நீங்கள் கேட்ட கட்சியையும் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். இப்போது இரட்டை இலையை விட பிரபலமாகிவிட்டது குக்கர்.
அதிமுக அம்மா அணியாக செயல்படுவோம். அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எங்கள் அணிக்கு வருவார்கள். இரட்டையை இலை சின்னத்தையும், அதிமுகவையும் கைப்பற்றுவோம். அதுவரை உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எது வந்தாலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். ஆர்.கே.நகரில் எங்கள் அணியின் சின்னமான குக்கரை தமிழகமே திரும்பிப்பார்த்தது. இந்த குக்கருக்கு விளம்பரம் தேவையில்லை. டிடிவி தலைமையில் ஆட்சி மாற்றம் நிகழும். இவ்வாறு கூறினார்.