கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இல்லை.
மேலும், 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான அரசு மருத்துவமனையாக செயல்பட வேண்டிய இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவர் முதல் ஊழியர்கள் வரை தினசரி தாமதமாக வருவது தொடர்ந்து வருகிறது
பணிக்கு வர வேண்டிய மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என்பதால் காய்ச்சல் தலைவலி போன்றவற்றால் அவதிப்படும் நோயாளிகள் மருத்துவர்கள் வருகைக்காக காத்துக்கிடக்கின்றனர்.
மேலும் தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலேயே மருத்துவர்கள் தினசரி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வருவதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனை பல மாதங்களாக இதே நிலையில் உள்ளதால், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.