திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுகாதாரம் அபாயகரமாக இருப்பதாக, அங்கு ஆய்வு செய்த தேசிய துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் பாதாள சாக்கடையில் இறங்கி கழிவுநீரில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பொழுது இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிதி உதவி வழங்க தேசிய துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹெராணி திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தார்.
அங்கு தரைதளம்,அவசர சிகிச்சை பிரிவு, ஹால் பகுதி, மருத்துவமனை கட்டிடத்தின் வெளிப்பகுதி, கழிவுநீர் செல்லும் பகுதி, உணவகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அவருக்கு முகம் சுளிக்கும் படி இருந்ததால், கடுகடுத்த முகத்தோடு ஒவ்வொருவரிடமும் சிடுசிடுத்து பேசினார்.
அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களோ எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் வேலைப்பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களிடம், "பாதுகாப்பு சாதனங்களை ஏன் அணியவில்லை," என கேட்டார். அவர்களோ பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை என உண்மையை போட்டுடைத்தனர். ஊதியமாவது சரியா கொடுக்கப்படுகிறதா என கேட்டார். அதற்கு பணியாளர்கள் ஊதியத்தில் பாதியை பிடித்துக்கொண்டு மீதிய கொடுக்கிறாங்க என்றனர்.
இதனை கேட்டு மேலும் கோபமடைந்த அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கே. விஜயகுமாரிடம் இது மருத்துவமனைப்போலவே இல்லை கழிவுகளின் கூடாரமாக இருக்கிறது. மருத்துவமனையில் சுகாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்றும், இங்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் நோயை உண்டாக்கும் வகையில் மருத்துவமனை இருப்பதாக கோபத்துடன் கூறினார்.
அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியர் ஆனந்தை தொடர்பு கொண்டு மருத்துவமனையின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை ஏன் கவனிக்கவில்லை என கேட்டார். இது குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், " துப்புறவு பணியின் போது ஏற்படும் விபத்துகளில் தமிழகமே இந்தியாவில் முதல் இடமாக உள்ளது. விபத்துக்களை குறைக்கும் வகையில் துப்புரவு பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது." என்றார்.