ட்ரம்ப் மீண்டும் பதவியேற்பதற்கான வழிமுறைகள் சுமூகமாக அமையும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 290 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்நிலையில், ட்ரம்ப் மீண்டும் பதவியேற்று நிர்வாகத்தை நடத்துவதற்கான வழிமுறைகள் சுமூகமாக நடைபெறும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "ட்ரம்ப் மீண்டும் பதவியேற்று நிர்வாகத்தை நடத்துவதற்கான வழிமுறைகள் சுமூகமாக நடைபெறும். தேர்தல் முறைகேடு பற்றி அறிந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் என்னை தொலைப்பேசி மூலம் அழைத்துப் பேசுகிறார்கள். சட்டப்பூர்வ நடவடிக்கை வேண்டும் என நாங்கள் நினைப்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வாக்குகளையும் நாங்கள் கண்டிப்பாக மீண்டும் எண்ணி முடிப்போம். இதன்மூலம் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார். அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.