அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையம் ஒன்றிலிருந்து அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘போயிங் 737 மக்ஸ்’ ரக விமானம் ஒன்று கடந்த 5 ஆம் தேதி புறப்பட்டது.
171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் புறப்பட்ட இந்த விமானம், 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மையப் பகுதியில் இருந்த ஜன்னல் கதவு ஒன்று திறந்து விமானத்தை விட்டு வீசியடிக்கப்பட்டது. வான்வெளியைவிட விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் அதிகம் இருக்கும் என்பதால், உடைந்த ஜன்னல் வழியாகக் காற்று வேகமாக வெளியேறி விமானத்தில் இருந்த பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பயணிகளிடையே பதற்றம் நிலவியது.
இதனையடுத்து, உடனடியாக விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு, பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில், அந்த ஜன்னலோர இருக்கையில் பயணிகள் இல்லாததால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து 727-9 ரக விமானங்களின் பயன்பாட்டையும் அலாஸ்கார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.