சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், விஷன் 2030 என்ற பெயரில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்தி வருகிறது அந்நாட்டு அரசு. மேலும் சவுதியை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டன. வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி, பெண்களுக்கு தொழில் தொடங்க அனுமதி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பெண்களை நியமித்தது என பெண்கள் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது சவுதி பெண்களிடையேயும், உலக நாடுகளிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சவுதியில் உள்ள பெண்கள், ஆண் அனுமதி இன்றி விமான பயணங்களை மேற்கொள்ளலாம் என் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அந்நாட்டுப் பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் தந்தை, கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்து வந்தது.
ஆனால் இந்த புதிய அறிவிப்பின்படி இனி 21 வயது நிரம்பிய எந்த ஒரு பெண்ணும் ஆண்களின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பு அந்நாட்டு பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.