
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்ட மம்தா பானர்ஜி, லண்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
மம்தா பானர்ஜி பேசிக் கொண்டிருந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்.எஃப்.ஐ (SFI) என்ற மாணவ அமைப்பினர் போன்ற இடதுசாரி அமைப்பினர் எழுந்து நின்று, 2023 பஞ்சாயத்து தேர்தலில் நடந்த வன்முறை, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், ஆர்.ஜி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி அது தொடர்பான பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனை பார்த்த மம்தா பானர்ஜி, “நீங்கள் என்னை வரவேற்கிறீர்கள், நன்றி. நான் உங்களுக்கு இனிப்புகளை வழங்குகிறேன். தயவுசெய்து உங்கள் குரலை உயர்த்துங்கள். இது ஜனநாயகம். நான் கவனமாக உங்கள் குரல்களை கேட்பேன். மருத்துவக் கல்லூரி மாணவி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். மத்திய அரசு அதை கையில் எடுத்துள்ளது. அது எங்களுடன் இல்லை. தயவுசெய்து இங்கே அரசியல் செய்யாதீர்கள். இது ஒரு அரசியல் அரசு அல்ல. அதை (அரசியல்) நீங்கள் என் மாநிலத்தில் என்னுடன் செய்யலாம். இங்கே இல்லை” என்று தெரிவித்தார்.
உடனே போராட்டக்காரர்களில் ஒருவர், ‘நீங்கள் பொய் சொல்கிறீர்கள்’ என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, “உங்கள் மீது தனி மதிப்பு வைத்திருக்கிறேன். இதனை அரசியல் தளமாக மாற்றாதீர்கள். அப்படி அரசியல் தளமாக மாற்ற விரும்பினால், வங்காளத்திற்குச் சென்று உங்கள் கட்சியை வலுப்படுத்த சொல்லுங்கள். பிரிவுவாத மக்களுக்கு எதிராக போராட்டம் செய்ய சொல்லுங்கள். என்னிடம் சண்டையிடாதீர்கள். நீங்கள் என்னை அவமானப்படுத்தவில்லை, உங்களது கல்வி நிறுவனத்தை தான் அவமதிக்கிறீர்கள். உங்கள் பல்கலைக்கழகத்தை அவமதிக்காதீர்கள். நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள். நான் ஒவ்வொரு முறையும் வருவேன். நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. நான் ஒரு ராயல் பெங்கால் புலி போல நடக்கிறேன். என்னைப் பிடிக்க முடிந்தால், என்னைப் பிடியுங்கள்” எனத் தெரிவித்தார்.