ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு, பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்தநாட்டை சுனாமி தாக்கியது. இதில், அந்தநாட்டின் புகுஷிமா அணு உலை கடும் சேதமடைந்தது. அப்போது, அணு உலையில், இருந்து வெப்பம் வெளியேறாமல் தடுக்கவும், கதிர்வீச்சைக் குறைக்கவும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.
அவ்வாறு, பயன்படுத்தப்பட்ட 1.3 மில்லியன் டன் தண்ணீர், அந்த அணுஉலை வளாகத்திலேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தண்ணீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் சுத்திகரித்தாலும் தண்ணீரில் உள்ள ட்ரிடியத்தின் அளவை குறைக்கலாமே தவிர, முழுவதுமாகப் பிரித்தெடுக்க முடியாது. இருப்பினும் ட்ரிடியம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது. அதேநேரம் உலகில் உள்ள பல்வேறு அணு உலைகள், ட்ரிடியம் கலந்த தண்ணீரை கடலுக்குள் செலுத்தி வருகின்றன. இதனையொட்டியே ஜப்பானும் ட்ரிடியத்தின் அளவை குறைத்து தண்ணீரை பசிபிக் கடலில் விட முடிவு செய்துள்ளது. புகுஷிமா அணு உலையை முழுவதுமாக செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஒரு பகுதியாக தண்ணீரை வெளியேற்ற ஜப்பான் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கு ஜப்பான் மீனவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தங்கள் தொழிலில் பெருங்கேடான தாக்கங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் சீனா, தென்கொரியா போன்ற நாடுகள், ஜப்பானின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்வதேச ஆணையங்கள் மற்றும் நிபுணர்கள், ஜப்பான் ட்ரிடியம் கலந்த தண்ணீரை கடலில் கலப்பது, கடலின் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடும் எனவும், அண்டை நாட்டு மக்களின் உடல்நலனை பாதிக்கும் எனவும் கூறுகிறார்கள். தென்கொரியா, இதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், இது தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் அமெரிக்கா, ஜப்பானின் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஜப்பானின் அணுகுமுறை சர்வதேசத் தரத்தில் இருப்பதாகக் கூறியுள்ளது. மேலும் சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஜப்பானின் திட்டத்தை, மனித நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிறைவேற்ற உதவுவதாகத் தெரிவித்துள்ளது.