பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்த மாதம் இறுதியில் இந்தியா வருவதாக இருந்தார். அதற்கான பயணத் திட்டங்கள் கடந்த மாதமே வகுக்கப்பட்டிருந்தன. இந்திய - பிரிட்டனின் நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தப் பயணத்தின்போது போரீஸ் ஜான்சன் விவாதிப்பார் என சொல்லப்பட்டிருந்தது.
அவரது இந்தியா வருகையின்போது, பல ஆண்டுகளாக பிரிட்டனிடம் இந்தியா எதிர்பார்த்திருந்த வங்கி மோசடியாளர் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என இரு நாடுகளின் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் உத்தரவில் கடந்த வாரம் கையெழுத்திட்டிருந்தது பிரிட்டனின் உள்துறை அமைச்சகம். இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால் இந்திய பயணத்தை திடீரென ரத்துசெய்துவிட்டார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்.
அதேபோல், அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு இந்த மாதம் இறுதியில் வர திட்டமிட்டிருந்தார் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட்சுகா. கரோனா பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால் யோஷிஹைட்சுகாவும் இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை ஜப்பான் நாட்டின் பிரதமர் அலுவலகம் இந்தியாவுக்குத் தெரிவித்திருக்கிறது.