நிலவில் முதன்முதலில் காலடி வைத்தவர்கள் யாரென்று கேள்வி எழுப்பினால், அனைவரும் உச்சரிக்கும் பெயர்கள், ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் என்பதாகவே இருக்கும். 1969ஆம் ஆண்டு, ஜூலை 20ஆம் தேதி, அப்பல்லோ 11 விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு, நிலவில் காலடி வைத்த சாதனையைச் செய்த இவர்கள் இருவரோடு இணைந்து சென்ற மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ். இவர் இன்று (29.04.2021) தனது 90வது வயதில் வயது மூப்பு மற்றும் புற்றுநோய் காரணமாக காலமானார்.
1960களில் நிலவில் இறங்குவதற்கான முயற்சியில், அமெரிக்கா, ரஷ்யா இடையே பலத்த போட்டி நிலவியது. அந்தச் சூழலில், நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அமெரிக்கா மகத்தான உலக சாதனையைப் படைத்தது. இந்த சாதனையைப் படைப்பதற்காக, சுமார் 2,38,000 மைல்கள் பயணித்து நிலவுக்குச் சென்ற மூவரில், ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் மட்டும் நிலவில் இறங்கி, 21 மணி நேரத்தை அங்கே செலவிட்டனர். பின்னர் அங்கிருந்து 21.5 கிலோ மதிப்புள்ள பொருட்களை சோதனை செய்வதற்காக சேகரித்துவிட்டு தங்கள் விண்கலத்துக்குத் திரும்பினார்கள்.
நிலவில் காலடி வைத்த சாதனை நிகழ்த்தப்பட்டபோது, மூன்றாவது விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ், அப்பல்லோ விண்கலத்தில், நிலவுக்கு 69 மைல்கள் தொலைவில், சுற்றுவட்டப்பாதையிலிருந்தபடி விண்கலத்தின் செயல்பாட்டைக் கண்காணித்தார். பின்னர், தங்கள் 8 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, மூவரும் பூமிக்குத் திரும்பினார்கள். பூமிக்குத் திரும்பிய பின்னர், 21 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டார்கள். நிலவிலிருந்து ஏதேனும் தொற்றுநோயைச் சுமந்துவந்து பூமியில் பரப்பிடக்கூடாதென்ற காரணத்தால் தனிமைப்படுத்திக்கொண்டனர். இவர்களுக்குப் பின், இதுவரை வேறு எவரும் நிலவில் காலடி வைக்கவில்லை. நிலவுக்குச் சென்ற சாதனைப் பயணத்தைத் தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் ஒளிபரப்பினார்கள். பல லட்சக்கணக்கான மக்கள் ஆச்சர்யத்துடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் கண்டுகளித்தனர். ஆனால் தொலைக்காட்சித் திரையில் மைக்கேல் கொலின்ஸ் தெரிவதற்கான வாய்ப்பு அமையவில்லை. நிலவுக்குச் சென்ற மூவரில் ஒருவரான நீல் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2012ஆம் ஆண்டு காலமானார்.
மைக்கேல் கொலின்ஸ், தனது சாதனைப் பயணத்திற்குப் பிறகு, வாஷிங்டனிலுள்ள நேஷனல் ஏர் & ஸ்பேஸ் மியூசியத்தில் பணியாற்றினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த மைக்கேல் கொலின்ஸ், தன் வாழ்நாளின் இறுதி நாட்களை, அமைதியாகவும் குடும்பத்தினருடனும் செலவழித்தார். தன் வாழ்நாள் முழுக்க, மனமகிழ்ச்சியோடும் மனிதநேயத்தோடும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டதாகவும், அதேபோல புற்றுநோயையும் எதிர்கொண்டு வாழ்ந்து மறைந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் அமெரிக்கா நிகழ்த்தியுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக் கதைகளை எழுதுவதற்கு கொலின்ஸ் உதவியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார். நிலவிருக்கும் காலம்வரை மைக்கேல் கொலின்ஸின் சாதனை பேசப்படும்!
- தெ.சு.கவுதமன்