உலகிலேயே அதிக நீர்வழிப் போக்குவரத்து நடைபெறும் வழித்தடம் சூயஸ் கால்வாய். இந்தக் கால்வாய் வழியாகப் பயணம் மேற்கொண்ட 400 மீட்டர் நீளமான எவர்க்ரீன் நிறுவனத்தின், 'எவர் கிவென்' கப்பல், கடுமையான காற்று காரணமாக கடந்த 22ஆம் தேதி வழியிலேயே சிக்கிக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து கப்பலை மீட்கும் பணிகள் நடைபெற்றது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, சூயஸ் கால்வாயில் சிக்கிய ஏழாவது நாள், கப்பல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கப்பல் மீட்பு பணிகளுக்காக இழப்பீடு கேட்கப் போவதாக எகிப்து நாடு அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, எவர் கிவென் கப்பல் தொடர்பான வழக்கை விசாரித்த எகிப்து நீதிமன்றம், இழப்பீடு தரும்வரை எவர் கிவென் கப்பலை பறிமுதல் செய்து வைத்திருக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாகக் கேட்டு, எகிப்து நாடு எவர் கிவென் கப்பலை பறிமுதல் செய்தது. 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட 6,758 கோடியாகும். அதேநேரத்தில் இந்த இழப்பீட்டுத் தொகையை யார் செலுத்துவது எனக் கப்பலின் உரிமையாளருக்கும், எவர் கிவென் கப்பல் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கப்பலின் உரிமையாளர், இந்த விவகாரத்தில் விரைவில் முடிவையெட்ட கடினமாக உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், கப்பலின் உரிமையாளர் 90 சதவீத தொகையைக் குறைக்கப் பார்க்கிறார். அவர் பணத்தைக் கட்ட விரும்பவில்லை என எகிப்து குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த கப்பலில் 25 இந்தியர்கள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.