லடாக் எல்லைப்பகுதியில் இந்திய சீன ராணுவவீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் சீனாவின் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீன ராணுவத்தினர் முகாமிட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாகப் பதட்டமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்றிரவு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினருக்கு மோதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இரண்டு வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பதட்டம் அதிகரித்துள்ள சூழலில், அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் லடாக் பகுதியில் நடந்த இந்த மோதலில் ஐந்து சீன வீரர்கள் பலியானதாகவும், 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், "சட்டவிரோதமாக இரண்டு முறை எல்லையைத் தாண்டி, சீன வீரர்கள் மீது ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் இருதரப்பினரின் ஒருமித்த கருத்தை இந்தியத் துருப்புகள் திங்களன்று கடுமையாக மீறியுள்ளன, இதன் விளைவாகக் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன" என சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.