கரோனா சிகிச்சைக்கு உதவும் முக்கியமான தடுப்பு மருந்தினை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 36 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2.5 லட்சத்திற்கும் மேலானவர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றிற்கு இதுவரை சிகிச்சை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா சிகிச்சைக்கு உதவும் முக்கியமான தடுப்பு மருந்தினை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நப்தாலி பென்னட் கூறுகையில், "பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான ஐ.ஐ.பி.ஆர் உருவாக்கியுள்ள மோனோக்ளோனல் நியூட்ரலைசிங் ஆன்டிபாடி, நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கரோனா வைரஸை அழிக்கக்கூடியது. இந்த மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு காரணமான இந்நிறுவன ஊழியர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையைக் கொண்டு வந்தது" எனக் கூறினார்.
மேலும், இந்தத் தடுப்பு மருந்துக்கு விரைவில் காப்புரிமை பெறப்படும் என ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இந்த மருந்து உற்பத்தியைத் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.