சீனா அண்மையில் விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் ஒன்றின் மிகப்பெரிய பாகம் மீண்டும் பூமியில் விழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் விண்வெளியிலிருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய வான்வெளி பொருள் இதுவே ஆகும்.
கடந்த மே 5 ஆம் தேதி ஏவப்பட்ட சீனாவின் லாங் மார்ச் 5 பி (சிஇசட் -5 பி) ராக்கெட் பூமியை ஒட்டியுள்ள சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இந்த ராக்கெட் திடீரென பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து வடமேற்கு ஆப்பிரிக்காவில் மவுரித்தேனியா கடல் பகுதில் விழுந்தது. சுமார் 21 மீட்டர் நீளமும், 18 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட் பாகம் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சேதமடைந்து 12 மீட்டர் நீளமுள்ள பாகம் மட்டுமே ஆப்பிரிக்காவில் விழுந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் சாலியட் -7 விண்வெளி நிலையத்திலிருந்து 39 டன் எடையுள்ள மிகப்பெரிய பாகம் ஒன்று பூமியில் விழுந்தது. அதன்பின் பூமியில் விழும் மிகப்பெரிய வான்வெளி பொருள் இதுவே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 11 ஆம் தேதி அன்று இந்த ராக்கெட் பாகம் பூமியில் விழுந்துள்ளதாக அமெரிக்க வான்படை தெரிவித்துள்ளது. விண்வெளியிலிருந்து அவ்வப்போது இதுபோன்ற பொருட்கள் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுவது வாடிக்கை என்றாலும், இதன் அளவு பலரையும் அச்சப்பட வைத்துள்ளது. மனித நடமாட்டம் இல்லாத கடல் பகுதியில் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட்டின் எச்சங்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவில் மீண்டும் விழக்கூடும் என்று பல விண்வெளி பார்வையாளர்கள் யூகிக்கின்றனர்.