சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் பல நூறு கோடி முதலீடுகளைத் திரும்பப்பெற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வணிகப் போட்டி காரணமாக மறைமுக மோதலில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா மற்றும் சீனா, கரோனா வைரஸ் பரவலுக்குப் பின் பொதுவெளியிலேயே தங்களது மோதலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இருநாடுகளும் கரோனா விவகாரத்தில் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்து வருவது சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில் சீனாவுடனான வருங்கால வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சீனர்கள் கூறினார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை. சீனா செய்த காரியங்கள் எதுவும் எனக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை. சீனா எப்போதும் அமெரிக்காவின் அறிவுசார் பொருட்களைத் திருடுகிறது. இதை நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். நாங்கள் நினைத்தால் சீனாவுடன் முழு உறவையும் துண்டிக்க முடியும். ஆனால், எனக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனவே, தற்போது நான் அவருடன் பேச விரும்பவில்லை.
சீனாவின் ஓய்வூதிய திட்டத்தில் அமெரிக்கா செய்துள்ள பல நூறு கோடி டாலர்கள் முதலீட்டைத் திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளேன். அதே போல் அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதற்கு அனைத்து விதிமுறைகளையும் கடுமையாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.