![Wife of Pranav Jewelery owner arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/QuCnVPeCKPNAOzIGNhFZR-Ih2EuVypX1DdoakS3kBJU/1702548724/sites/default/files/inline-images/A3684.jpg)
திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.
இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால், முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதன் செல்வராஜின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.