சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர் பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே துறையில் மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஜன. 27ம் தேதி சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாறுதல் செய்து, தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது, சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் கார்மேகம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பணியிடம் ஒதுக்கப்படவில்லை.
சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, 1978ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பிறந்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பிரிவில் தேர்ச்சி பெற்று பணியாற்றி வந்த அவர், 2019ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், ஏற்கெனவே கடந்த 2021ம் ஆண்டு, டான்மேக் நிர்வாக இயக்குநராக சேலத்தில் சிறிது காலம் பணியாற்றி வந்துள்ளார்.
சேலம் மாவட்ட வரலாற்றில் இதுவரை ஆண்களே மாவட்ட ஆட்சியர்களாக கோலோச்சி வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ரோகிணி ஆர்.பாஜிபாகரே, இந்த மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, தற்போது நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, இந்த மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சியர் என்பதோடு, இம்மாவட்டத்தின் 174வது ஆட்சியர் என்ற சிறப்பையும் பெறுகிறார்.
தற்போது சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் பிருந்தா, சரக டிஐஜி உமா, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை (வளர்ச்சி) என முக்கிய பொறுப்புகளில் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆட்சியராக டாக்டர் ஆர்.பிருந்தாதேவி ஓரிரு நாளில் பொறுப்பேற்க உள்ளார்.