கோடைக்காலம் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு இடங்களில் குளம் மற்றும் ஏரிகளில் குளிக்கச் செல்லும் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அண்மையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கல்வடங்கம் காவிரி ஆற்றில் 10 கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 15ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலாற்றில் குளிக்கச் சென்று இரு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்றுகூட சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே இரண்டு பள்ளி மாணவர்கள் ஏரியில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் கடலூரிலும் இரு சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் குளித்துக் கொண்டிருந்த இன்பராஜ் (8), தினேஷ் (14) ஆகிய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மாணவர்கள், சிறுவர்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.